Friday, February 3, 2017

சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா - வரலாற்று நாயகன்

கலியுகத்தில் பம்பையில் பிறந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷியை சம்ஹாரம் செய்து வன்புலி வாகனனாக தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோவில் கொண்டார் சாஸ்தா என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை

நம்மில் பலர் அறியவேண்டிய வரலாற்று சாஸ்தா: பாண்டிய ராஜ வம்சம் எதிரிகளால் சீர்குலைக்கப்பட்டு கி.பி. 1081இல் சிறிய காலம் வள்ளியூரிலும் பின்பு தென்காசியிலும் ஆட்சி செய்தது. அந்த தென்காசி பாண்டியர்களின் வழி வந்த அரசர்கள் கேரள தேசத்தில் பந்தள நாட்டில் ஆட்சியை நிறுவினார்கள்.

பந்தள தேச அரசர்களின் ராஜசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் உதயணன் மற்றும் புதுச்சேரி முண்டன் போன்ற கொள்ளைக்காரர்கள் பலம் மிகுந்தவர்களாக இஞ்சிப்பாறை கோட்டையில் வாழ்ந்து வந்தனர். ராஜசேகர பாண்டியனின் பெண்ணை அரண்மனைக்குள் புகுந்து தூக்கிச்சென்று இஞ்சிப்பாறைகோட்டையில் உதயணன் சிறை வைத்திருந்தான். கோயிலை சூறையாட நினைத்து அக்கோவில் நம்பூத்திரியை கொன்றான். சபரிமலை சாஸ்தா கோவில் நம்பூத்திரியின் மகனான ஜெயந்தன் என்பவன் இஞ்சிப்பாறை கோட்டைக்குள் புகுந்து ராஜகுமாரியை காப்பாற்றி பொன்னம்பலமேட்டில் ரகசியமாகக் காந்தர்வ விவாகம் புரிந்தான். சாஸ்தாவின் அருளால் பந்தள இளவரசிக்கும் ஜெயந்தன் நம்பூதிரிக்கும் ஐயப்பன் என்ற மாவீரன் பிறந்து பந்தள ராஜனிடம் சேவகம் செய்து வந்தான்.

வண்டிப்பெரியாறு என்னும் இடத்தில் நடந்த சண்டையில் கொள்ளையர்களிடமிருந்து மதுரை அரசனான மானவிக்ரம பாண்டியனை ஐயப்பன் காப்பாற்றினார். அதன் பின்பு பாண்டியசேனை, பந்தளசேனை ஆகிய இரண்டு சேனைகளுக்கு தலைமை தாங்கி இஞ்சிப்பாறைக் கோட்டையின் கோட்டை மீது வாவரின் உதவியோடு படையெடுத்து உதயணன் மற்றும் புதுச்சேரி முண்டன் போன்ற கொள்ளைக்காரர்களை வீழ்த்தினார். அதன் பிறகு சபரிமலை கோவிலை புதுப்பித்து கட்டி எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே ஜோதியாக மாறி மகர சங்கராந்தியன்று சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் விக்கிரஹத்தில் ஐக்கியம் ஆனார். இவ்வாறு ஐயப்பனை பற்றி மற்றொரு வரலாறு கூறுகிறது. வரலாற்று ஐயப்பன் காரணமாக தான் இன்னும் நாம் பேட்டைதுள்ளல் செய்துவருகிறோம். பொன்னம்பலமேடு ஜோதியை மகர சங்கராந்தியன்று தரிசனம் செய்கிறோம்.

புராணகால இறை அவதாரத்தையும்  வரலாற்றுக்கால அவதார புருஷனையும் இணைத்து பேசி அதில் வரும் குழப்பங்களை களைய வேண்டும் என்ற நோக்கில் தான் எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா பல இடங்கள் சென்று ஆதாரங்கள் திரட்டி "சாஸ்தா மஹாத்மியம்" என்ற மாத இதழை late 1980 இருந்து தொடங்கி 10 வருடங்களுக்கு மேல் பிரசூரித்து வந்தார், "சாஸ்த்ரு சப்தாகம்" என்ற 7 நாள் சொற்பொழிவு தொடர் ஆங்காங்கே நடத்தி வந்தார்.

அவரது கனவான அஷ்ட சாஸ்தா திருக்கோவில் உருவாக முயற்சிகள் எடுத்து வருகிறோம். இத்திருக்கோவில் திருப்பணியை எங்கள் குருநாதர் பாதார விந்தங்களுக்கு அர்பணிக்கிறோம்.

சத்குருநாதரே சரணம் ஐயப்பா!!!

No comments:

Post a Comment