Wednesday, April 11, 2018

காஞ்சி காமாக்ஷி அம்மன் சன்னதியில் மற்றொருஆதி சாஸ்தா

அடுத்த மாதம் (27-05-2018) வேப்பம்பட்டு அஷ்டசாஸ்தா திருக்கோவிலில் கும்பாபிஷேகம். இன்று (11-04-2018) கோவில் bank account இல் சில ஆயிரங்கள் மட்டுமே balance உள்ளது.

இன்னும் திருப்பணி வேலைகள் பல பல. ஸ்தபதி வேலை (சிற்பம்), ஸ்தபதி வேலை (சுதை) - பூசுவேலை, painting,  கதவு, படிக்கட்டுகளில் வரும் கைப்பிடி, கலசம் என்று கட்டுமான பணிகள் அடுக்கி கொண்டே போகலாம்.

இதற்கு மேல் கும்பாபிஷேக வேலைகள் ஏற்பாடு செய்யவேண்டும்: அன்னதானம், வைதீக சம்பாவனை, ஹோம திரவியங்கள், பந்தல், மேளம், சீரியல் லைட், mike, வஸ்திரம் என்று செய்ய வேண்டிய காரியங்களும் நீண்டுக்கொண்டே போகின்றது.

இருப்பதோ ஒரு மண்டலம்; சுமார் 20 லட்சங்கள் தேவைப்படுகிறது. இவ்வளவு பணிகளை எப்படி செய்ய போகிறோம் என்று ஒரு விதமான பயம், மனக்குழப்பம். மற்றொரு பக்கம் "இது நம் பணி இல்லை, இது ஆண்டவன் பணி தானே? தன் காரியத்தை சிறப்பாக நடத்திக்கொள்ள அவனுக்கு தெரியும். பொம்மலாட்டத்தில் கீழே ஆடிக்கொண்டு இருக்கும் பொம்மைகள் தான் நாம். நம்மை மேலிருந்து இயக்கிக்கொண்டு இருப்பவர் மேலே இருக்கிறார். எதை எப்படி செய்யவேண்டும் என்று அவருக்கு தெரியும்" என்று உள்ளுணர்வு அவ்வப்பொழுது தைரியம் கொடுத்துக்கொண்டே வருகிறது.

இதற்கு நடுவில் 4-5 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக முதல் பத்திரிக்கையை காஞ்சி மடத்தில் சமர்ப்பிக்க சென்றிருந்தேன்; எந்த ஒரு நல்ல விஷயங்களை ஆரம்பிப்பதற்கு முன் காஞ்சி மடம் சென்று ஆரம்பிக்க வேண்டும் என்பது என் தந்தை, வில்லிவாக்கம் விஸ்வநாத சர்மா, தன் செயல்கள் மூலம் சொல்லி கொடுத்த பாடம்.

எனக்கும் என் தந்தைக்கும் சில விஷயங்களில் ஒற்றுமை இருக்கும். ஆன்மீக விஷயங்களில் ஆண்டவனை மட்டுமே நம்பி இரங்கக்கூடியவர். மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபவர்கள். மாறாத தன்மை கொண்டவர் ஆண்டவன் மட்டுமே.


"நித்தம் நித்தம் மாறுகின்ற உலகிலே,
நித்திய ப்ரம்மச்சாரியோ சபரியிலே"

 அப்படி காமாக்ஷி அம்மன் கோவில் சென்றிருந்த பொழுது அக்கோவில் ஸ்தானிகர் திரு நடராஜ சாஸ்திரிகளை சந்திக்க நேர்ந்தது. 6 வருடங்கள் முன்பு "guru samarpanam" என்ற மஹா பெரியவரின் பொன்மொழிகள் கொண்ட ஆங்கில புத்தகத்தை தொகுக்க முதல் ஆதரவு கரத்தை கொடுத்தவர் இவர் தான். என்னை சேர்ந்தவர்கள் பலருக்கும் ஆங்கில புத்தகம் என்பதால் ஒரு பயம். புத்தகத்தை காமாக்ஷி அம்மன் கோவிலில் பால பெரியவா வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார். காமாக்ஷி அம்பாளின் கருணையினால் இந்த புத்தகம் என்னை திரு அப்துல் கலாம் அய்யாவை சந்திக்கும் அளவிற்கு  எடுத்து சென்றது.



போன வாரம் கோவில் கும்பாபிஷேகத்தை பற்றி அவரிடம் சொன்னவுடன் அகமகிழ்ந்து புன்னகைத்தார். வேப்பம்பட்டு அஷ்டசாஸ்தா கோவிலின் மூலவர் ஸ்ரீ ஆதி பூதநாதர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில்  காமகோட்டத்தின் பிரகாரத்தில் அவரை காணலாம். 1987 ஆம் ஆண்டு காஞ்சி மஹா பெரியவா என் தந்தைக்கு கொடுத்த அருளாணை சுமார் 30 வருடங்கள் பிறகு நிறைவேறுகிறது என்ற பெருமிதம் அவர் கண்களில்.

"பெரியவாளிடம் மூலவர் விக்ரஹத்தை காட்ட ஆசைப்படுகிறேன்" என்று நான் கூறியவுடன், "தசமஹாவித்யா ஹோமம் 09-04-2018 முதல் 18-04-2018 வரை நடக்கிறது. ஹோமம் நடக்கும் வசந்த மண்டபத்தில் விக்ரஹத்தை வைத்துக்கொள்ளலாம். பெரியவா நிச்சயம் பார்ப்பார்" என்றார்.



இன்று காலை (11-04-2018) சென்னையிலிருந்து காமாக்ஷி அம்மன் கோவில் வந்து விக்ரஹத்தை திரு. நடராஜ சாஸ்திரிகள் சொன்ன இடத்தில் வசந்த மண்டபத்தில் வைத்துவிட்டு சென்னை திரும்பினேன்.


கொஞ்ச நேரத்தில் ஒரு கால் வந்தது. திரு நடராஜ சாஸ்திரிகள் பேசினார். "இன்று நம் தசமஹா வித்யா ஹோமத்தின் உபயதாரர் Mr. X இப்பொழுது வந்தார். அவர் குலதெய்வம் நம் காமாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் சாஸ்தாவை போல் இருப்பாராம். வசந்த மண்டபத்தில் இருக்கும் இந்த விக்ரஹத்தை தரிசித்தவுடன் தன் குலதெய்வத்தை நேரில் தரிசித்த சந்தோஷம் Mr. X இற்கு கிடைத்தது. திங்கட்கிழமை (09-04-2018 காலை) வசந்த மண்டபத்திற்கு வர வேண்டிய விக்ரஹம் இன்று காலை தான் சாஸ்தா வந்தார் என்றவுடன் Mr X இற்கு மகிழ்ச்சி. காரணம்: தனக்காகவே சாஸ்தா  இன்று காலை வந்ததாக Mr X கருதுகிறார்" என்றார்.

என்னை புதன்கிழமைக்குள் (11-04-2018) விக்ரஹத்தை காமாக்ஷி அம்மன் கோவில் வசந்த மண்டபத்தில் வைத்துவிட வேண்டும் என்று என்னை ஏதோ ஒரு உள்ளுணர்வு சொன்னது. காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு வந்த Mr X இற்கு தன் குலதெய்வத்தை தரிசித்த மகிழ்ச்சியை தர வேண்டி தான் இந்த லீலையோ? இன்றே பெரியவாளுக்கு சாஸ்தா காண்பிக்கவோ? என்ன காரணம் என்று தெரியவில்லை. எது எப்படியோ, எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம். பொறுத்திருந்து பார்க்கலாம்

"நடப்பது எல்லாம் நாராயணன் செயல்"